423. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 2
டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.
சாரு நிவேதிதா தனக்கு 2 நாட்களாக தூக்கமில்லை என்றும், பதற்றமாக இருப்பதாகவும் சொல்லி தன் பேச்சைத் தொடங்கினார். தனது இரண்டு ஆசான்கள் சுஜாதா மற்றும் ஜெ.கா என்றும், பாரதம், உபனிஷத், இன்னபிற விஷயங்கள் ஜெ.கா விடமிருந்து கற்றதாகவும், நவீன விஷயங்களை வாத்தியாரிடம் கற்றதாகவும் உணர்ச்சிகரமாகக் கூறினார். அதோடு, திருமதி சுஜாதா வாத்தியாரை போஷித்ததால் தான், அவர் வீட்டுக் கவலைகள் இன்றி எழுத்தில் வெற்றி பெற முடிந்தது என்றும், வாத்தியாரை அப்பாவாக நினைத்து அவர் பிரிவினால் வாடும் மனுஷ்யபுத்ரன், வசந்த் மற்றும் கனிமொழிக்கு தனது இரங்கல்களை தெரிவிக்க விரும்புவதாகவும் சொன்னார். மேலும், நடிப்புக்கு என்று பார்த்தால், சிவாஜிக்குப் பிறகு கமல், அவருக்குப் பிறகு சில நல்ல இளம் நடிகர்கள் இருப்பது போல, வாத்தியாரின் பாணியிலும், ரேஞ்சிலும் எழுத அவருக்குப் பிறகு யாருமே இல்லை என்பது தான் யதார்த்தம் என்று சாரு புகழாரம் சூட்டினார்.
சிவாஜி என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட, வாத்தியார் எழுதிய முதல் கதையை மீட்டுத் தருபவருக்கு, பாதி சாம்ராஜ்ஜியத்தை தந்து, மகளையும் மணமுடித்துக் கொடுப்பதாக சுஜாதா 'சாவி'யில் ஓர் அறிவிப்பு விட்டதை சாரு நினைவு கூர்ந்தார். அவ்வறிவிப்பை வாசித்து தான் வாத்தியாரின் மருமகனாக ஆகும் வாய்ப்பு உள்ளதை எண்ணி குதூகலம் கொண்டு, சாவி வார ஏடுக்கு, தன்னிடம் வாத்தியாரின் அந்த 'முதல்' கதை பத்திரமாக இருப்பதாகவும், திருமணத்தை எங்கு எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டும் சாரு ஒரு கடிதம் எழுதினாராம் :)
அந்த 'முதல்' கதையின் காப்பியை வாங்கித் தரும்படி சுஜாதா தன்னை நச்சரிப்பதாக சாருவுக்கு கடிதம் எழுதிய சாவி, வாத்தியாருக்கு மகள் கிடையாது என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். சாருவும் பதிலுக்கு தானும் பொய் சொன்னதாக ஒப்புக் கொண்டதை சாரு நகைச்சுவையாக நினைவு கூர்ந்தார். வாத்தியார் Roald Dahl போல எழுதுவதாக வாத்தியாரிடமே தான் கூறியதையும், வாத்தியாருக்கு (ஒரு நல்ல படைப்பாளிக்கு மிக அவசியமான) வாசிப்பின் மீது இருந்த passion பற்றியும், வாத்தியாரின் தொடர்ந்த கற்றலினால் அவர் எழுத்துக்கு என்றுமே வயதாகாதது பற்றியும், பாரதிக்குப் பிறகு வாத்தியார் ஒரு Cultural Force ஆக விளங்கியது குறித்தும் சாரு தனது பேச்சில் குறிப்பிட்டார்.
அரங்க மேடையில், வாத்தியாரின் நீண்ட விரல்கள் பேனாவோடு உறவாடும், enlarage செய்யப்பட்ட ஒரு வித்தியாசமான புகைப்படத்தை சுட்டிக் காட்டிப் பேசிய சிவசங்கரி, சுஜாதா இந்த வித்தியாசமான அஞ்சலிக் கூட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பார் என்றும், தமிழை எளிமைப்படுத்தியவர் பாரதி, அடுக்களைப் பெண்களையும் வாசிக்க வைத்தவர் கல்கி, தொழிலாளர்களையும் வாசிக்கச் செய்தவர் சி.பா.ஆ என்ற வரிசையில் இளைய தலைமுறையை மொத்தமாக ஈர்த்தவர் என்ற பெருமைக்குரியவர் சுஜாதா என்றும் கூறினார்.
வாத்தியார் தனது 40 வருட நண்பர் என்று நினைவு கூர்ந்த சிவசங்கரி, வாத்தியார் visual writing என்பதை தமிழுக்குக் கொண்டு வந்ததையும், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், இலக்கியம், கேள்வி-பதில் என்று அனைத்திலும் முத்திரை பதித்ததையும், சாவி அவர்கள் வாத்தியாருக்கும், வேணுகோபாலனுக்கும் தனக்கும், 'நட்சத்திர அந்தஸ்து' பெற்றுத் தந்ததையும், வாத்தியார் தன் எழுத்துக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்ததையும், வாத்தியார் தமிழ் எழுத்துலகில் ஒரு trend setter ஆக பல காலம் விளங்கியதையும் குறிப்பிட்டுப் பேசினார். 30 வருடங்களுக்கு முன் வாத்தியார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று செலவிட்ட மகிழ்ச்சியான தருணங்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்!
மதன், சுஜாதா கட்டிய கண்ணுக்குத் தெரியாத மேம்பாலத்தில் பயணித்த எழுத்தாளர்களில் தானும் ஒருவன் என்றும், வாத்தியார் மீடியாவில் எப்போது பொறுப்பேற்றுக் கொண்டாலும் உடனடியாக ஊழியர்களின் சம்பளத்தை ஏற்றியது பற்றியும், அவரது மகத்தான அறிவால் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்தவர் என்றும், வாத்தியார் (குறைந்த) ஊதியத்தைப் பற்றிக் கவலைப்படாததால் தான் சினிமாவில் பரிமளிக்க முடிந்தது என்றும், திறமை மிக்கவர்களை சினிமாவுக்கு வரவழைக்க எழுத்தாளர்களின் சம்பளத்தை கூட்ட வேண்டும் என்றும்,வாத்தியார் தமிழ்நாட்டை விடுத்து வேறெங்காவது பிறந்திருந்தால் இன்னும் நிறைய சம்பாதித்து இருப்பார் என்றும், சில controversial விஷயங்களை தொட்டுப் பேசினார் !
Pentamedia சந்திரசேகர், James Hadley Chase, Harodl Robbins வாசித்த தலைமுறையை நைலான் கயிறு, அனிதா இளம் மனைவி போன்ற நாவல்களால் தமிழுக்குத் திருப்பிய பெருமை வாத்தியாரையே சாரும் என்றும், தனது நிறுவனம் தயாரித்த பாண்டவாஸ், அலிபாபவும் 40 திருடர்களும், புத்தா, கல்லிவர் டிராவல்ஸ் போன்ற அமிமேஷன் படங்களுக்கு அவரது திரைக்கதையும், எளிய ஆங்கில வசனமும் வலு சேர்த்தன என்றும், வாத்தியார் ஒரு நிஜமான 'multi media' (வானொலி, டிவி, சினிமா, பத்திரிகை ..) மனிதர் என்றும் சிலாகித்துப் பேசினார். Pentamedia அலுவலகத்தில் வாத்தியார் பயன்படுத்திய அறையை கடந்த 2 வருடங்களாக யாரும் பயன்படுத்தவில்லை என்றும் நெகிழ்ச்சியாகக் கூறினார்.
ஓவியர் ஜெயராஜ் ஜாலியாகப் பேசினார். வாத்தியார் எழுத்தில் சுவாரசியமும், spontaneity-யும் இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக, "எதிர்வாடையில் ஒரு ஜெயராஜ் போய்க் கொண்டிருந்தது" என்று சுஜாதா எழுதியதை அவர் சுட்டியவுடன் அரங்கில் கைதட்டல் ! வாசகரின் அறிவுத்திறனை மதித்தும், வட்டார வழக்கை கூர்மையாக அவதானித்தும் வாத்தியார் எழுதினார் என்றும் ஜெ குறிப்பிட்டார். வாத்தியார் நகைச்சுவையை காஷ¤வலாகவும், subtle ஆகவும் வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர் என்றாலும், அவரை தமிழகத்தின் பெர்னார்ட் ஷா என்றெல்லாம் உளர தான் விரும்பவில்லை என்றும், மற்றவர்களை மனம் திறந்து பாராட்டுவதில் வாத்தியாருக்கு நிகர் அவரே என்றும் ஜெ கூறினார் !
ஒரு முறை சாவி நடத்திய வாசகர் விழா ஒன்றில், சுஜாதாவை இளைஞர்கள் மொய்த்துக் கொண்டு, தங்கள் சட்டையைக் கழற்றி மார்பில் கையெழுத்து இடுமாறு அன்புத் தொல்லை செய்தபோது, வாத்தியார் கண்களோ அங்குமிங்கும் அலை பாய்ந்தன. 'என்ன தேடறீங்க?' என்று ஜெ கேட்க, 'வாசகிகள் யாரையும் காணோமே!' என்றாராம் வாத்தியார் :)
இன்னொரு சமயம், மாரீஸ் ஓட்டலில் மேடையில் பேசுவதற்கு முன்னால் தான் நெர்வஸாக இருந்தபோது வாத்தியாரிடம் டிப்ஸ் கேட்டதையும், அதற்கு சுஜாதா மெல்ல, 'எனக்கும் உதறலாத் தான் இருக்கு!' என்றதையும் நினைவு கூர்ந்த ஜெ, வாத்தியாருக்கே உதறல் என்ற சங்கதி தனக்கு தெம்பைக் கொடுத்ததால், மேடையில் அன்று சிறப்பாக தான் பேச முடிந்ததாகவும் நகைச்சுவையாகக் கூறினார். அன்று, பேச்சை முடித்துக் கொண்டு ஜெ மேடையை விட்டு இறங்கியவுடன், வாத்தியார், "என்னய்யா, உதறி முடிச்சாச்சா?" என்று கலாய்த்ததை இன்று நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்று ஜெயராஜ் கூறினார் :)
வாத்தியார் இல்லை என்ற விஷயத்தை தன்னால் தாங்க முடியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் ஜெ தன் உரையை முடித்துக் கொண்டார் !
மற்ற பிரபலங்கள் பேசியவை மூன்றாம் (இறுதி) பாகத்தில் வரும் !
எ.அ.பாலா
7 மறுமொழிகள்:
Rest in Peace, Sujatha Sir !
பதிவுக்கு நன்றி பாலா.
சாருவின் கடுமையான விமர்சனங்களையே படித்துப் பழகி, அவரது உரையைப் படித்தால் அவர் இப்படிப் பேசினாரா என்று ஆச்சரியம் ஏற்படுகிறது.
மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கிறது என்ற யோசிப்பை அடிக்கடி சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். எனது நேற்றைய கனவே அவரே திரும்ப வந்து அதைப்பற்றி சுவாரஸ்யமாகக் கற்றதும் பெற்றதுமில் எழுதிவிட்டுத் திரும்பச் சென்றதாக வந்து அதிகாலை மூன்று மணிக்குத் என்னைத் தூக்கிவாரிப்போட்டு எழ வைத்து, யதார்த்தம் உணர்ந்ததும் விடியும் வரை விழித்துக்கொண்டே படுக்கையில் படுத்திருக்க வைத்தது.
எனக்கென்னவோ அவரது படைப்புகள் இருக்கும் வரை அவரது மரணம் உறைக்கவே போவதில்லை என்றுதான் தோன்றுகிறது.
நன்றி.
பாலா,
வெறும் புள்ளிவிவரத்தனம் மட்டும் இல்லாமல் ஒரு நல்ல தொகுப்பு.
சாரு, தன் தாயார் (மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர், ஜுஜாதா என்றுதான் குறிப்பிடுபவர்) முதற்கொண்டு அனைவரையும் கவர்ந்தவர் வாத்தியார் என்று நெகிழ்ந்தது நினைவுகூரத்தக்கது.
சிவசங்கரியின் அந்த
இ
ற
ங்
கி
னா
ன் விஷயம் தொடர்பான ஒரு சுவாரசியம் - அந்த வசீகரம் இடம்பெற்றிருந்தது ஜேகே எனும் புதினத்தில் (சத்யராஜின் ஏர்போர்ட் திரைப்படத்தின் புத்தக வடிவம்). அதன் முன்னுரையில் சுஜாதா, சாவியில் இந்தத் தொடருக்கு கதைக்கான எந்த முன்யோசனையும் இல்லாமல் அறிவிப்பு வெளியிட்டு விட்டதாகவும், அதன் அவஸ்தையை அதன் முதல் சில அத்தியாங்கள் திசையற்றுப் போவதை வைத்து வாசகர்கள் உணர முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற பேச்சுக்களை நீங்கள் பதிவு செய்யும்போது தொடர்பான நிகழ்ச்சிகளை மறுமொழி இடுகிறேன்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
(http://selections.wordpress.com)
Desikan site-il India Glitz padangalai parthathi-vida, vegu elimaiyagavum,unarchi-poorvagamum irrukindrathu ungalin report.
Thodarunthu adutha padhivaiyum seekiram podavum.
Maraindha Mamedaikku ungalin pangum Medaiyil-pesia anaivarukkum equal -agave ulladhu.
thanks once again for ur timely report.
sundaram
பாலா,
பதிவும் அதன்கூட வந்த வெங்கட்ரமணனின் பின்னூட்டம் சேர்ந்து சுவாரசியமா இருக்கு.
ஒருவாரமாகிருச்சுல்லே அவர் போய்(-:
ஹூம்........
வற்றாயிருப்பு சுந்தர்,
சாரு அன்று உணர்ச்சிக் குவியலாக காணப்பட்டார் ! வாத்தியாரின் எழுத்துக்கல் உள்ள வரை, அவருக்கு இறப்பு என்பது கிடையாது தான் !!!
வெங்கட்ரமணன்,
மேலதிக தகவல்களுக்கு நன்றி. பேசியதில், அங்கங்கே சில விஷயங்கள் மறந்து விட்டன !
சுந்தரம் ஐயா, துளசி அக்கா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment